News Channel

பத்திரிக்கை அறிக்கை

18 நவம்பர் 2026

பாதிக்கப்பட்டவரின் தரப்பைக் கேட்காமல் பல்கிஸ் பானு வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேசியச் செயலாளர் திருமதி ரஹ்மத்துன் நிஷா அப்துர்ரஸாக் கவலை தெரிவிப்பு.

புதுடெல்லி: 
பல்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இரு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அக்டோபர் 28 உத்தரவு குறித்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தேசியச் செயலாளர் திருமதி ரஹ்மத்துன் நிஷாஅப்துர்ரஸாக் 
கடும் கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் திருமதி ரஹ்மத்துன் நிஷா கூறியதாவது:

"இந்த ஜாமீன் உத்தரவு, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான பாதுகாப்பு குறித்தும், நமது நீதி வழங்கும் அமைப்பின் மீது சாதாரணக் குடிமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த இருவரும், 2008-ல் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த 11 குற்றவாளிகளில் அடங்குவர். அந்தத் தண்டனையை 2017-ல் மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. அவர்கள் 17 ஆண்டுகள் சிறையில் இருந்ததையும், அவர்களில் ஒருவர் கடுமையான மாற்றுத்திறனால் பாதிக்கப்பட்டிருப்பதையும் ஜாமீனுக்கான காரணங்களாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், குற்றங்களின் கொடூரத்தன்மை, பாதிக்கப்பட்டவரின் சூழ்நிலைகள், நீதிக்கும் பொது நம்பிக்கைக்கும் ஏற்படும் பரந்த தாக்கங்கள் ஆகியவையும் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை. இத்தகைய கொடூரமான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தண்டனைகளை நிறுத்திவைப்பது, மிகுந்த உணர்வுப்பூர்வமாகவும் கடுமையான ஆய்வுடனும் அணுகப்பட வேண்டும்."

"2002 குஜராத் கலவரத்தின் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் ஓர் உத்தரவு, அவருக்குத் தெரிவிக்கப்படாமலும், தன் தரப்பைக் கூற அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமலும் பிறப்பிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த முடிவைப் பற்றி பில்கிஸ் பானு பத்திரிகைச் செய்திகள் மூலமே அறிந்துகொண்டார். ஜாமீன் தொடர்பான முக்கியக் கட்டங்கள் உட்பட, குற்றவியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தன் தரப்பைக் கூறவும் பாதிக்கப்பட்டவர்களுக்குள்ள சுயாதீன உரிமையை உச்ச நீதிமன்றமே அங்கீகரித்துள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையையும், தன் கைக்குழந்தை உட்பட குடும்பத்தின் 14 உறுப்பினர்களின் கொலையையும், நீதிக்காக ஆண்டுக்கணக்கில் நடத்திய போராட்டத்தையும் சந்தித்த ஒருவர், இவ்வளவு முக்கியமான ஒரு முன்னேற்றத்தை ஊடகங்கள் வழியாகத் தெரிந்துகொள்ளும் நிலை ஏற்படக்கூடாது."

"குஜராத் அரசு வழங்கிய தண்டனைக் குறைப்பை 11 குற்றவாளிகளுக்கும் ரத்து செய்த 2024 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பில்கிஸ் பானு அனுபவித்த அசாதாரணத் துன்பத்தை அங்கீகரித்திருந்தது. அவர் நாடோடியாகவும் அனாதையாகவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார் என்றும், 
அந்தக் கொடூர வன்முறை அவர் மனதில் அழியாத தடத்தைப் பதித்துவிட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. தன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, முன்னேறிச் செல்லும் துணிவைப் பெற்ற பின்னர், பில்கிஸ் பானு மீண்டும் அச்சத்தையும் நிச்சயமற்ற நிலையையும் எதிர்கொள்ள நேர்ந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 
நீதி என்பது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்ந்த அனுபவங்களுக்குச் செவிசாய்ப்பதாக இருக்க வேண்டும். அவர்களின் கண்ணியம், பாதுகாப்பு, தங்கள் தரப்பைக் கூறும் உரிமை ஆகியவை நீதி நடைமுறையின் மையமாகத் தொடர வேண்டும்."

"அரசியல் கைதிகள் பலர் உட்பட ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள், தண்டனை நிரூபிக்கப்படாமலேயே சிறைகளில் வாடுவதும், 
அவர்களின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால், 
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு அதே நீதி அமைப்பு ஜாமீனும் பரோலும் வழங்குகிறது. 
இந்த அப்பட்டமான ஏற்றத்தாழ்வு, குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மை, ஒருமித்த தன்மை, பாரபட்சமின்மை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது."

வெளியிடுபவர்:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புதுடெல்லி.