காணாமல் போகும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வகையில் அதிகரிப்பு: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியச் செயலாளர் திருமதி. ரஹ்மத்துன்னிஷா பெரும் கவலை
புது தில்லி:
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் அண்மையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவலின்படி,
கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாநிலத்தில் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட 2,69,500 பேரில், 50,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை என்பது குறித்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மகளிர் பிரிவின் அகில இந்தியச் செயலாளர் திருமதி. ரஹ்மத்துன்னிஷா அப்துல் ரசாக் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"48,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 2,200 சிறுமிகள் இன்னும் 'கண்டுபிடிக்கப்படாதவர்கள்' (Pending) என்ற பட்டியலில் இருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒரு மனித உயிர் இருக்கிறது.
ஒரு மகள், ஒரு சகோதரி அல்லது ஒரு தாய் இருக்கிறார்கள்.
அவர்களின் இந்த மர்மமான மறைவு நமது சமூக மனசாட்சியிலும்,
அரசு நிறுவனங்களின் பொறுப்பிலும் உள்ள பாரதூரமான இடைவெளிகளையே காட்டுகிறது. இந்த இக்கட்டான சூழல், பெண்களைக் கடத்தல்,
சுரண்டல் மற்றும் வன்முறைக்கு ஆளாக்கும் ஆழமான பாலின அநீதியை வெளிப்படுத்துகிறது.
இந்தூர், போபால், குவாலியர் மற்றும் ஜபல்பூர் போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போயிருப்பது, நகர்ப்புற பாதுகாப்பு தணிக்கை மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறை நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடி ஒரு மாநிலத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட திருமதி. ரஹ்மத்துன்னிசா, 2023-ஆம் ஆண்டின் அகில இந்தியத் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் காணாமல் போகிறார்கள் என்றும், அவர்களில் பாதி பேர் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வது அரசின் அரசியலமைப்பு மற்றும் தார்மீகப் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
"பொதுப் பாதுகாப்பு என்பது உறுதியான அரசியல் விருப்பம், துறைசார்ந்த ஒருங்கிணைப்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் வறுமை, குடும்ப வன்முறை, பாதுகாப்பற்ற இடப்பெயர்வு போன்றவற்றைச் சரிசெய்யும் சமூக நலத்திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்," என்று அவர் கூறினார்.
மேலும், திருக்குர்ஆனின் (4:1) "உங்களைப் பெற்றெடுத்த கருப்பைகளை (பெண்களை) மதியுங்கள்" என்ற வசனத்தை மேற்கோள் காட்டிய அவர், பெண்களின் புனிதத்தையும் கண்ணியத்தையும் பேணுவது இறைக்கட்டளை என்றும், அவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவது சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பெண்களை ஒரு போகப் பொருளாகச் சித்தரிப்பதும், ஆபாசங்கள் அதிகரிப்பதும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த சமூகத்தின் பொறுப்புணர்வை மழுங்கச் செய்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
வலுவான சட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளுடன், கலாச்சார மற்றும் தார்மீக விழுமியங்களைப் பாதுகாப்பதும், குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, காணாமல் போன பெண்கள் தொடர்பான வழக்குகளைக் காலக்கெடுவின்றி 'நிலுவையில்' வைத்திருப்பது பொறுப்பற்ற செயலாகும் என்று கூறிய அவர், இதற்கென ஒரு தேசிய அளவிலான விரிவான செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நீதியான மற்றும் மனிதாபிமானமிக்க இந்தியாவை உருவாக்குவதற்கான அடிப்படை என்று கூறி தனது அறிக்கையை நிறைவு செய்தார்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத் தேசியச் செயலாளர்,
ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
தலைமையகம்,
புது தில்லி.