பத்திரிக்கை அறிக்கை
07.02.2026
இந்தியா-அமெரிக்கா வரி ஒப்பந்தம்,
மத்திய பட்ஜெட் முன்னுரிமைகள் மற்றும் அதிகரித்து வரும் வகுப்புவாத, சாதி ரீதியான வன்முறைகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கவலை
புது தில்லி:
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வர்த்தக வரி ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான தகவல்கள் வெளிவரும் விதம் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஊடகங்களிடம் பேசிய
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர்
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் கூறியதாவது:
"நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்த ஒப்பந்தத்தின் நுணுக்கமான விவரங்கள் குறித்து நாடாளுமன்றமோ அல்லது இந்திய மக்களோ நம்பிக்கைக்கு எடுக்கப்படவில்லை.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இந்திய அரசின் வெளிப்படையான அறிவிப்புகள் மூலம் வராமல், சமூக ஊடக அறிக்கைகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் மூலமாகவே முதன்மையாக வெளிவருகின்றன.
அமெரிக்காவிலிருந்து வரும் பொது அறிக்கைகள், அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்கக்கூடும் என்றும்,
அதே சமயம் இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா சுமார் 18 சதவீத வரியை விதிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது ஒப்பந்தத்தின் சமநிலை மற்றும் நியாயத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
வெற்றி எனத் தற்போது முன்னிறுத்தப்படும் வரி விகிதங்கள், உண்மையில் முன்பு இருந்த வரி விகிதங்களை விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பாதுகாப்பு வரிச் சலுகைகளைப் பெற்று வந்த இந்தியாவின் விவசாயத் துறையைத் திறந்துவிட வாய்ப்புள்ளதாக வரும் அறிகுறிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் என JIH கவலை கொள்கிறது.
மேலும்,
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த விவகாரத்தில் இந்திய அரசிடமிருந்து முறையான உறுதிப்படுத்தலோ அல்லது மறுப்போ வராதது, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரமான முடிவெடுக்கும் திறன் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட் 2026–27 குறித்து
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் கூறுகையில்:
"அரசு மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மூலதனச் செலவினங்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும், வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூகத் துறைத் தேவைகள், விரிவடைந்து வரும் ஏற்றத்தாழ்வு மற்றும் அதிகரித்து வரும் பொதுக் கடன் சுமை ஆகியவற்றைத் தீர்ப்பதில் பட்ஜெட் பின்தங்கியுள்ளது.
₹12.2 லட்சம் கோடிக்கும் அதிகமான மூலதனச் செலவு நீண்ட கால உள்கட்டமைப்புக்கு உதவக்கூடும், ஆனால் முறைசாரா தொழிலாளர்கள், கிராமப்புற குடும்பங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தில் இது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது.
சமூகத் துறைக்கான செலவினங்கள் குறைவாகவே உள்ளன என்றும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவு தேசியக் கொள்கை இலக்குகளை விட மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நலத்திட்டங்களுக்கான நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படாதது மற்றும் வட்டி செலுத்துவதற்காகப் பெரும் தொகையைச் செலவிடுவது அத்தியாவசிய சமூகச் செலவினங்களைக் குறைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சி என்பது மனித மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான முதலீடு இல்லாமல் முழுமையடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
- வகுப்புவாத மற்றும் சாதி ரீதியான வன்முறைகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான் அவர்கள் பேசுகையில்:
சிறுபான்மையினர், தலித் சமூகத்தினர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பாகுபாடுகளைக் கடுமையாகக் கண்டித்தார். "2025 ஆம் ஆண்டில் ஆவணப்படுத்தப்பட்ட 1,318 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளில் 98 சதவீதம் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளன.
உத்தரகண்ட் மாநிலம் கோட்த்வாரில், ஒரு முஸ்லிம் வியாபாரியை வகுப்புவாதத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயன்ற இளைஞர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்குகிறது என்றார்.
வகுப்புவாதம் மற்றும் சாதி வெறுப்பு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆபத்தானது என்றும், இது போன்ற வன்முறைகள் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மலிக் முஹ்தசிம் கான் வலியுறுத்தினார்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.