பத்திரிக்கை அறிக்கை
உத்தரபிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்
மத்திய கல்வி வாரியம் (MTB) வரவேற்கிறது.
புது தில்லி:
ஜனவரி 21-2026
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதிப்படுத்தியும்,
உத்தரபிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் செயல்பாடு குறித்த சட்டப்பூர்வ நிலையைத் தெளிவுபடுத்தியும், கடந்த ஜனவரி 16, 2026 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் (லக்னோ அமர்வு) வழங்கிய தீர்ப்பை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய கல்வி வாரியம்
(Markazi Taleemi Board - MTB) வரவேற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய கல்வி வாரியத்தின் செயலாளர் திரு. சையத் தன்வீர் அகமது கூறுகையில்,
"உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சிறுபான்மையினரின் கல்வியில் தொலைநோக்கு மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்.
மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் தங்களின் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்க உரிமை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 30-ன் சாராம்சத்தை இந்தத் தீர்ப்பு வலுப்படுத்துகிறது" என்றார்.
மேலும்
நாடு முழுவதும் உள்ள மதரஸா நிர்வாகிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
அங்கீகாரம் பெறாத மதரஸாக்களை மூடி சீல் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணையை கௌரவ நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு மதரஸா அங்கீகாரம் பெறவில்லை என்பதற்காக மட்டுமே அதனை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசாங்க உதவி அல்லது முறையான அங்கீகாரத்தைப் பெற விரும்பாத சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பின் 30(1) பிரிவின் கீழ் பாதுகாப்பு பெற தகுதியுடையவை என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
எவ்வாறாயினும்,
அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் அரசாங்க மானியங்களைப் பெறத் தகுதியற்றவை என்றும், அத்தகைய நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் முறையான அங்கீகாரம் பெறும் வரை வாரியத் தேர்வுகள் அல்லது பிற அரசு வசதிகளைப் பெறத் தகுதி பெறமாட்டார்கள் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இடையே ஒரு சீரான பார்வையை முன்வைக்கிறது.
முறையான சட்ட அதிகாரம் இன்றி ஒரு கல்வி நிறுவனத்தை மூடுவது போன்ற நிர்வாக நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், அதே வேளையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான தரத்தைப் பேணுவதில் அரசாங்கத்திற்கு உள்ள நியாயமான உரிமையையும் அங்கீகரித்துள்ளது.
மத்திய கல்வி வாரியத்தின் கருத்துப்படி, இந்தத் தீர்ப்பு அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய முடிவாகும். சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான தற்போதைய விவாதங்களுக்கு மத்தியில் இது தேவையான தெளிவை வழங்குகிறது.
சிறுபான்மையின சமூகங்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதிலும்,
அதே நேரத்தில் சட்டக் கட்டமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்வதிலும் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர்,
ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புது தில்லி