News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை 

13 ஜனவரி 2026

டாக்டர் முஹம்மது மன்சூர் ஆலமின் மறைவிற்கு சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி இரங்கல்

புது தில்லி: 
இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ்' (IOS) அமைப்பின் நிறுவனரும், 
நீண்டகாலத் தலைவருமான டாக்டர் முஹம்மது மன்சூர் ஆலமின் மறைவிற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

அவரது மறைவு இந்திய முஸ்லிம் சமூகத்திற்கும், இஸ்லாமிய அறிவார்ந்த உலகிற்கும் ஏற்பட்ட ஒரு பேரிழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இரங்கல் செய்தியில் சையத் சாதத்துல்லாஹ் ஹுசைனி கூறியிருப்பதாவது:
"டாக்டர் முஹம்மது மன்சூர் ஆலம் ஒரு சிறந்த அறிஞர், தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவன கட்டமைப்பாளர் மற்றும் சமூகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு சேவகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

அறிவார்ந்த நேர்மை, 
தார்மீகத் தெளிவு மற்றும் நீதிக்கான அடித்தளம் அறிவே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவையே அவரது வாழ்வின் அடையாளங்களாக இருந்தன.

ஆராய்ச்சி, பகுத்தறிவு மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை டாக்டர் ஆலம் எப்போதும் வலியுறுத்தி வந்ததை ஹுசைனி சுட்டிக்காட்டினார். "உணர்ச்சிகளாலோ அல்லது போராட்டங்களாலோ மட்டும் ஒரு சமூகம் உயர்ந்துவிட முடியாது; மாறாகக் கடுமையான ஆராய்ச்சி, நம்பகமான தரவுகள் மற்றும் அரசுடனும் சமூகத்துடனும் கொள்கை ரீதியான ஈடுபாடு ஆகியவற்றின் மூலமே சமூகம் முன்னேறும் என்று அவர் நம்பினார்," என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இந்தியாவில் முஸ்லிம் சிந்தனைகளுக்கான நிலையான கல்வித்தளங்களை உருவாக்கியதில் டாக்டர் ஆலமின் பங்கைப் பாராட்டிய ஜமாஅத் தலைவர், "IOS அமைப்பின் மூலம் அறிவுசார் தன்னம்பிக்கை மற்றும் கல்வி ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை அவர் உருவாக்கினார். 

சமூகத்தை நேர்மையுடன் ஆய்வு செய்யவும், பொறுப்புணர்வுடன் பேசவும், தேசிய மற்றும் உலகளாவிய விவாதங்களில் ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்கவும் பல தலைமுறை அறிஞர்களுக்கு அவர் ஊக்கமளித்தார்," என்றார்.

மேலும், 
டாக்டர் ஆலம் பணிவு, 
பொறுமை மற்றும் விடாமுயற்சி கொண்டவர் என்றும், உடல்நலக் குறைபாடுகளின் போதும் அவர் அறிவுசார் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது செய்தியின் நிறைவாக 
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி கூறுகையில், "நம்பிக்கையில் ஊன்றிய கருத்துக்கள், அறநெறி சார்ந்த கல்வி மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட தலைமை ஆகியவற்றின் மூலமே நிலையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதற்கு டாக்டர் ஆலமின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். 

அவர் இறைவனிடம் சென்றுவிட்டாலும், அவரது அறிவுசார் மரபும் அவர் உருவாக்கிய நிறுவனங்களும் நமக்குத் தொடர்ந்து வழிகாட்டும்," என்றார்.

அன்னாரின் நற்செயல்களை இறைவன் ஏற்றுக் கொள்ளவும், 
அவருக்குச் சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தைத் தரவும், அவரது குடும்பத்தினருக்கும் சகாக்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் பொறுமையை வழங்கவும் அவர் பிரார்த்தனை செய்தார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர்,
ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.