News Channel

வாழ்த்துச் செய்தி

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
-------------------------

- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவரின் பெருநாள் செய்தி

ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்ததை அடுத்து இப்போது ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. இந்த இருபெரும் நாள்களும் இறைவனை
நினைவு கூரும் விதமாக அவன் புகழ்பாடும் நன்நாளாக அமைவதுடன் பல நம்பிக்கையூட்டும் படிப்பினைகளையும்
தருகின்றன.

இந்த உலகம் தோன்றியது எப்படி? நாம் எங்கிருந்து வந்தோம்? நம்மைப் படைத்தவன் யார்? கடவுள் ஒன்றா பலவா? ஒன்றெனில் அவன் யார்? என்ற பகுத்தறிவுத் தேடலில் ஓரிறைக் கொள்கையை உணர்ந்து பிரகடனப்படுத்தியவர் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள். சிந்தித்து, ஆய்ந்து உணர்ந்த கொள்கைக்காக உறுதியாக நிலைத்து நின்று பெரும்
சோதனைகளுக்கு முகம் கொடுத்தவர் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்.

அந்தக் கொள்கையின் அடிப்படையில் தன் குடும்பத்தைச் செதுக்கியதுடன், ஒரு கொள்கைச் சமுதாயத்திற்கு வித்திட்டவர்கள் அவர்கள். நபி இப்ராஹீம் அவர்கள் போதித்த ஓரிறைக் கோட்பாடு, அதற்காக அவர்கள் செய்த
மகத்தான தியாகங்கள், தம் குடும்பத்தை வார்த்தெடுத்த விதம் ஆகியவற்றை ஒவ்வொரு முஸ்லிம் மாத்திரமல்ல, ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காக வல்லவன் வகுத்த வழிதான் ஆண்டுதோறும்
கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாள்.

உலகின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் ஓரிறையின் மையக் கேந்திரமான புனித கஅபாவில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி ஓர் இனம், ஓர் இறை, ஓர் மறை, ஓர் குலம் என்ற பிரகரனத்தை பறைசாற்றுகின்றனர். ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை உலகக் குடிமகனான உணரும் மாபெரும் மகத்தான ஆன்மிக, சகோதரத்துவ, சமத்துவ மாநாடுதான் ஹஜ் ஒன்றுகூடல்.

இந்த இனிய தருணத்தைக் கொண்டாடி மகிழும் முஸ்லிம்களுக்கும், வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிக்கொள்ளும் சகோதரச் சமுதாயச் சொந்தங்களுக்கும் எமது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இந்த இனிய நாளில்கூட பெரும் இழப்பிற்கு ஈடுகொடுத்து நிற்கும் ஃபலஸ்தீன மக்களின் துயர் நீங்குவதற்கும், அவர்களின் வாய்மையான போராட்டம் வெற்றிபெற்று சுதந்திரக் காற்றை அவர்கள் சுவாசிக்கவும்,
கொடுங்கோலர்களான யூத சியோனிஸத்தின் பேயாட்டம் ஓயவும் இந்த நேரத்தில் பிரார்த்திக்கின்றேன்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாரும் இணைந்தின்பம் பெற வேண்டும்.

ஈத் முபாரக்

மெளலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ

மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி

https://www.facebook.com/share/p/Y3jsdhXHiNoSdo7f/?mibextid=oFDknk