News Channel

பத்திரிக்கை அறிக்கை

"பத்திரிகை அறிக்கை"

18 செப்டம்பர் 2026

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல் இந்திய மக்கள் மீது சுமையாக இருக்கக் கூடாது
JIH துணைத் தலைவர் எஸ். அமீனுல் ஹசன்
புது தில்லி:

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100% வரை சுங்கவரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளதற்கு
 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அமைப்பின் துணைத் தலைவர் எஸ். அமீனுல் ஹசன் தனது  கவலையைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"2026ஆம் ஆண்டின் லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தை (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வன்மையாகக் கண்டிக்கிறது. 

இந்தச் சட்டம், ரஷ்யா-உக்ரைன் போருக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை இராஜதந்திர நடவடிக்கைகளைக் கடந்து, கடுமையான மற்றும் தண்டனைக்குரிய பொருளாதார நடவடிக்கைகளாக விரிவுபடுத்துகிறது. 
இந்த வியூகமானது அறநெறி மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு தன்மைகளின் அடிப்படையில் தவறானதாகும். 

முதலாவதாக, சுங்கவரிகள் இறக்குமதியாளர்கள் மீது விதிக்கப்பட்டாலும், அதன் இறுதிச் சுமையானது அமெரிக்க நுகர்வோர், இந்திய ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 104 பில்லியன் டாலர்களாக இருந்தது. 

தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு புவிசார் அரசியலின் (geopolitical dispute) விலைக்காக சாதாரண இந்தியத் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எதற்காகப் பாதிக்கப்பட வேண்டும்? நிறுவப்பட்ட எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு திடீர் இடையூறும் போக்குவரத்து, தொழில் துறை, உணவுப் பொருட்கள் விலை மற்றும் குடும்பங்களின் வரவு-செலவுத் திட்டங்களை மோசமாகப் பாதிக்கும். 

இரண்டாவதாக, அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்தாலும், வேறு வழிகளின்றி மற்ற இடங்களிலிருந்தே கச்சா எண்ணெயைப் பெற வேண்டியிருக்கும். 
இது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா அல்லது பிற உற்பச்சியாளர்களிடமிருந்து விநியோகத்திற்கான போட்டியை அதிகரிக்கச் செய்யும். உலகளாவிய எண்ணெய் சந்தை மேலும் இறுக்கமடைந்தால், ரஷ்யாவின் வருவாயைக் குறைக்கும் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் போவதோடு, சர்வதேச அளவில் எண்ணெய் விலையும் உயரக்கூடும்."

 "தனது நாட்டின் 140 கோடி மக்களுக்கும் மலிவான மற்றும் நம்பகமான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியாவுக்கு நியாயமான உரிமை உண்டு.

 இருப்பினும், எரிசக்தி பாதுகாப்பு என்ற கொள்கையானது, வெறும் விநியோகத்தைப் பெறுவதோடு நின்றுவிடாமல், மலிவான எரிசக்தி பாமர மக்களின் கைகளைச் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யை இந்தியா அதிகமாகச் சார்ந்திருப்பது ஒரு தற்காலிகப் பிரச்சினை அல்ல, அது நம் நாட்டின் அடிப்படைப் பலவீனமாகும். 
இதன்  மலிவான கச்சா எண்ணெய்யை விற்க முன்வரும் மற்றொரு நாட்டைத் தேடுவது இதற்கு நீண்ட காலத் தீர்வாக இருக்க முடியாது.
இது ஒரு சார்புநிலைக்குப் பதிலாக மற்றொரு சார்புநிலையை உருவாக்குவதற்கே வழிவகுக்கும். பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில்வே துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி திறன், மின்சார வாகனப் போக்குவரத்து, பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறை ஆகியவற்றில் தீவிர முதலீடுகளைச் செய்வதன் மூலமே இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை இந்தியப் பொருளாதாரம் குறைக்க முடியும்.

 இந்த மாபெரும் எரிசக்தி மாற்றமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நமது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும்" 

இந்திய அரசு எந்தவொரு ஒற்றைப் புவிசார் அரசியல் பிரிவையோ அல்லது எரிசக்தி மூலத்தையோ அளவுக்கு அதிகமாகச் சார்ந்திராமல், உண்மையான மூலோபாய சுயாட்சியைப் (strategic autonomy) பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 "இந்தியா தனது எரிசக்தி மற்றும் வர்த்தகக் கூட்டாண்மைகளைப் பல்வகைப்படுத்த வேண்டும். அதேவேளையில், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொதுப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி திறன் மேம்பாடு ஆகியவற்றில் தனது முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டும். 

இந்தியா தன்னை ஒரு குறிப்பிட்ட புவிசார் அரசியல் வலையத்திற்குள் முடக்கிக் கொண்டு தனது மூலோபாய சுயாட்சியைத் தளரச் செய்யக் கூடாது. நமது வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமைதியைப் பாதுகாப்பது, பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குவது மற்றும் சாதாரண குடிமக்களின் நலனுக்காக உழைப்பது ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். இந்த மோதல் பரந்த அளவிலான பொருளாதார மோதலாக மாறுவதைத் தவிர்க்க, இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ச்சியான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

இந்திய அரசு தனது வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதோடு, அதன் முடிவுகள் மக்களின் நலன் மற்றும் நாட்டின் நீண்ட கால நலன்களால் மட்டுமே வழிநடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத் 
தேசிய செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.