பத்திரிகையாளர் சந்திப்பில் சாதியப் பாகுபாடு, SIR மற்றும் மத சுதந்திரம் குறித்த விவகாரங்கள் எழுப்பப்பட்டன
புதுதில்லி:
கடந்த ஆகஸ்ட் 26 அன்று போத்தே கோஷி – திரிசூலி நதிப் படுகைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேபாளத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் (JIH) மூன்று பேர் கொண்ட தூதுக்குழு தில்லி திரும்பியுள்ளது.
இத்தூதுக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, பேரிடரால் ஏற்பட்டுள்ள மனிதநேயத் தேவைகளை மதிப்பீடு செய்தது.
கள ஆய்வின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், நேபாள நாட்டின் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, அவசரகால நிவாரண நடவடிக்கைகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திட்டமிட்டு தொடங்கியுள்ளது.
மீட்பு மற்றும் அவசரகால நிவாரணமே தற்போதைய முன்னுரிமை
மாதாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசியச் செயலாளர் மௌலானா ஷஃபி மதனீ, பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி, பாதுகாப்பான குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்குவதே முதன்மைப் பணியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நேபாள அரசும் அதன் பேரிடர் மீட்பு அமைப்புகளும் மிகுந்த சவாலான சூழலிலும் பாராட்டுக்குரிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், பேரிடரின் பரந்துபட்ட தீவிரத்தைக் கருத்தில் கொள்ளும்போது அரசு நிர்வாகங்களுக்கும் சில நடைமுறை வரம்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இடிபாடுகளிலிருந்து மக்கள் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்டு வருவதாலும், இப்போதே நீண்டகால மறுவாழ்வுத் தேவைகள் குறித்து இறுதி முடிவுக்கு வருவதோ அல்லது விரிவான திட்டங்களை வகுப்பதோ இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பேரிடரில் குடும்பத்தினர், வீடுகள், வாழ்வாதாரம் மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நேபாள அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாதது கவலைக்குரிய அம்சமாக உள்ளது என்றும் மௌலானா ஷஃபி மதனீ சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழலில் மீட்பு மற்றும் அவசரகால நிவாரணப் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருதுகிறது. கள நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இக்கட்டத்தில் வரையறுக்கப்பட்ட அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இழப்புகள் துல்லியமாக மதிப்பிடப்பட்டு, மக்களின் தேவைகள் தெளிவாகத் தெரியவந்த பின்னரே நீண்டகால மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் நேபாள அரசு, பாதுகாப்புப் படைகள், உள்ளூர் மக்கள் மற்றும் மனிதநேய அமைப்புகளின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சாதியப் பாகுபாட்டை ஒழிக்க சட்ட அமலாக்கமும் சமூக மாற்றமும் அவசியம்
பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் எஞ்சினியர் (பொறியாளர் முஹம்மது சலீம்), அரசியலமைப்புப் பாதுகாப்புகளும் முற்போக்கான சட்டங்களும் நடைமுறையில் இருந்தபோதிலும், சாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும் தொடர்வது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் பட்டியல் சாதியினருக்கு (SC) எதிராக 57,789 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், பழங்குடியினருக்கு (ST) எதிரான குற்றங்களும் நீண்டகால நோக்கில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் தலித் பள்ளி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு சாதிய ரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும், ராஜஸ்தானில் இரு தலித் இளைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும், சாதியத் தப்பெண்ணங்கள் மக்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் தொடர்ந்து அச்சுறுத்துகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் அவசியமானவை என்றாலும், மனிதர்களை இழிவுபடுத்துவதையும் ஒதுக்கி வைப்பதையும் இயல்பாகக் கருதும் சமூக மனநிலையை சட்டங்களால் மட்டுமே மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நடைமுறையிலுள்ள சட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துதல், விரைவான புலன்விசாரணை மற்றும் வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றுடன், பாகுபாட்டு மனநிலையை மாற்றும் தொடர்ச்சியான அறநெறி மற்றும் கல்விசார் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிறப்பு, சாதி, இனம் அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையிலான அனைத்து விதமான பாகுபாடுகளையும் இஸ்லாம் முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றும், ஒவ்வொரு மனிதனின் இயல்பான கண்ணியத்தையும் அது அங்கீகரிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
SIR: உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்
செய்தியாளர்களிடம் பேசிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் எஸ். அமீனுல் ஹசன், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பாக கடுமையான கவலை தெரிவித்தார்.
SIR நடவடிக்கையின் மூலம் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களின் வாக்குரிமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, தில்லி, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டதையும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் SIR மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களால் தீர்த்து வைக்கப்பட்ட 82,782 வழக்குகளில் 75,443 பெயர்கள் (91%) மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது பெயர் விடுபட்டுள்ளதைக் கண்டறிந்து, சிக்கலான உரிமைகோரல் மற்றும் மேல்முறையீட்டு நடைமுறைகளை வெற்றிகரமாகக் கடந்து வருவதை மட்டுமே ஒரு குடிமகனின் வாக்குரிமைக்கான ஆதாரமாக மாற்றிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
மத சுதந்திரமும் மனசாட்சியின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்
மத சுதந்திரம் குறித்துப் பேசிய எஸ். அமீனுல் ஹசன், இந்தியாவில் மத சுதந்திரம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அதிகரித்து வரும் சட்டக் கட்டுப்பாடுகளும் சமூகத் தடைகளும் ஆழ்ந்த கவலையளிப்பதாக தெரிவித்தார்.
சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் சமீபத்தில் இடிக்கப்பட்ட சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை என்றும், இது மத சுதந்திரம், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், இடிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள தெளிவான வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்ற தீவிரமான கேள்வியையும் இந்நடவடிக்கை எழுப்புகிறது என்றும் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாகப் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை சில தன்னிச்சையான தலைவர்களும் அதிகாரிகளும் முடிவு செய்ய முடியும் என்றால், நமது ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் மீதும், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் மக்களுக்கு உள்ள நம்பிக்கை தகர்ந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பும் பத்திரிகை சுதந்திரமும்
தில்லி சாகேத் காவல் நிலையத்தில் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்களான ஷாஹீன் கான், நஃபீஸா கான் ஆகியோர் தாக்கப்பட்டதாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்தைக் குறிப்பிட்ட எஸ். அமீனுல் ஹசன், ஒருவரது மத அடையாளம் பாகுபாட்டிற்கோ அல்லது பாரபட்சமான அணுகுமுறைக்கோ காரணமாக அமையக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மனசாட்சியின் சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவை அச்சம், மிரட்டல் அல்லது சட்டவிரோதத் தலையீடுகள் இன்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டிற்குப் பதிலாக நீதி, உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோருகிறது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகப் பிரிவு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புதுதில்லி