ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உதயமானது..!
'நள்ளிரவு நேரத்தில், உலகமே உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழிப்புடன் இருந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது...!' 1947இல் விடுதலை நாளில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் இந்த நள்ளிரவு முழக்கத்துடன் தான் நம்முடைய நாடு தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது.
அவை உண்மையிலேயே குதூகலம் நிறைந்த தருணங்கள். 200 ஆண்டுக்கால பிரிட்டிஷ் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுகின்ற தித்திப்பான நாள்கள் தாம் அவை.
'அரசியல் விடுதலையுடன் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி, நியாயம் ஆகிய வலுவான மாண்புகளின்மீது தேசத்தைக் கட்டமைத்து, அமைதி, முன்னேற்றம், ஈடேற்றம் ஆகியவற்றுக்கான பாதையில் தேசத்தை வழிநடத்திச் செல்வதுதான் இன்றியமையாதது. அரசியல் விடுதலையை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த மாண்புகளின் அடிப்படையில் தேசத்தைக் கட்டமைக்க முடியாது' என அவர்கள் ஓங்கி முழங்கினார்கள்.
அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகத்தாம் இருந்தார்கள். ஆனால் உறுதியும் தீரமும் நிறைந்தவர்களாய் மிளிர்ந்தார்கள். மேலும் காலச் சக்கரத்தின் ஓயாத சுழற்சியில் மக்களாட்சியைத் தாங்கி நிற்கின்ற தூண்கள் செல்லரித்துப் போய் விடாமல் நிற்பதற்குஇறைவன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும், நம்முடைய செயல்கள் அனைத்துக்கும் மறுமையில் இறைவனிடம் கணக்கு காட்ட வேண்டியிருக்கும் என்கிற பதில் சொல்கின்ற பொறுப்பு உணர்வும் தேவை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
ஓயாத போர்களும் தீராத சண்டைகளுமாய் சீர்கெட்டுக் கிடக்கின்ற இந்த உலகத்தில் நீதிக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், இறைப்பற்று ஆகிய மாண்புகளுக்கும் இறைவனை மையமாகக் கொண்ட வாழ்வுக்கும் ஒளிமயமான எடுத்துக்காட்டாக ஜொலிக்கின்ற நாடாக தம்முடைய நாட்டை ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக, ஆசையாக, ஏக்கமாக இருந்தது. இந்த இலட்சியவாதிகள் 1948 ஏப்ரல் மாதத்தில் கங்கை நதிக்கரையில் அலஹாபாத் மாநகரத்தில் ஒன்றுதிரண்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்கிற பெயரில் இலட்சிய ஜமாஅத் ஒன்றை நிறுவினார்கள். 1948 ஆவது ஆண்டில் சொற்பமான எண்ணிக்கையினருடன் தன்னுடைய இலட்சியப் பயணத்தைத் தொடங்கிய இந்த ஜமாஅத் இன்று திரும்பும் திசையெங்கும் கிளை பரப்பி நம்முடைய நாட்டின் மூலைமுடுக்கெங்கும் தன்னுடைய ஆளுமைகளைக் கொண்டிருக்கின்ற பேரியக்கமாக செழிப்பாக நிற்கின்றது. ஆன்மிக வளம், மக்கள் சேவை, விழுமம் சார்ந்த அரசியல், பல்சமய கலந்துரையாடல், ஒழுக்க வரம்புகளை மீறாத இதழியல், நியாய உணர்வு நிறைந்த பொருளியல், சமத்துவமும் சகோதரத்துவ வாஞ்சையும் தழைக்கின்ற சமூகவியல், கல்வி, ஆராய்ச்சி என்று மக்கள் நலனையும் தேச நலனையும் ஒற்றை நோக்கமாகக் கொண்ட ஏராளமான துறைகளில் முத்திரை பதித்து வருகின்றது.
குறிக்கோள்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குறிக்கோள்தீனை நிலைநாட்டுவதாகும். அதாவது வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மார்க்கத்தைப் பின்பற்றுவதும் மார்க்கத்தின் அடிப்படையில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அதனை நிலைநாட்டுவதுமாகும். குர்ஆனிலிருந்தே இது பெறப்பட்டுள்ளது.
நம்பிக்கைகள்

இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்தும் கீழ்ப்படிந்தும் வாழ்தல், இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடத்தல், மறுமையை முன்னிறுத்தி செயல்படுதல் ஆகிய மூன்றுதாம் வாழ்வுக்கு அர்த்தம் தருகின்ற, அதனை அழகூட்டுகின்ற, அதனை நெறிப்படுத்துகின்ற அடிப்படையான, இன்றியமையாத கோட்பாடுகளாக இருக்கின்றன. ஜமாஅத் கடைப்பிடிக்கின்ற மாண்புகள், நடைமுறைகள் ஆகிய அனைத்தும் இந்தக் கோட்பாடுகளிலிருந்தே பெறப்படுகின்றன.
வழிகாட்டுதல்

வழிகாட்டுதலுக்கான அடிப்படைகளாய், மூல ஊற்றுகளாய் இருப்பவை குர்ஆனும் அன்பு நபிகளாரின் அமுத வாக்குகளும் அழகிய நடைமுறைகளும் தாம்.
வழிகாட்டும் நியதிகள்

கருத்துச் சுதந்திரம், பரஸ்பரம் ஆலோசித்து செயல்படுதல், இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உணர்வு ஆகிய மூன்றுதாம் ஜமாஅத்தின் அனைத்துச் செயல்பாடு களையும் நெறிப்படுத்தும் நியதிகளாய் இருக்கின்றன.
தொலைநோக்கு

இறையச்சம், அமைதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவ வாஞ்சை, நீதி, இணக்கம் ஆகியவற்றை அடிப்படைகளாகக் கொண்ட சமூகத்தைக் கட்டமைப்பதுதான் ஜமாஅத்தின் தொலைநோக்குத் திட்டமாகும். அச்சம் இல்லாத தேசத்தை, அநீதி இல்லாத வீதியை, அக்கிரமம் நடக்காத இல்லத்தை, ஊழல் இல்லாத வணிகத்தை, கள்ளம் இல்லாத ஊடகத்தை, குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கே ஜமாஅத் பாடுபடுகின்றது.
இலட்சியப் பணி

சமூகத்திலும் நாட்டிலும் நன்மைகளை ஏவிவிடவும் தீமைகளைத் தடுக்கவும் தான் ஜமாஅத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது. வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தவே ஜமாஅத் விரும்புகின்றது. இறையச்சம், பொறுமை, இறைப்பற்று நிறைந்த வாழ்வு, மென்மை, நிதானம், நேர்மை, வாய்மை, ஒழுக்கத் தூய்மை, பாசம், நேசம், வீரம், தீரம், துணிவு, கனிவு, பணிவு, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மாண்பு, நன்றியுணர்வு போன்ற சிறப்பான பண்புகளைக் கொண்ட அழகான ஆளுமைகளாய் நம்முடைய நாட்டின் ஆண்களையும் பெண்களையும் வார்த்தெடுக்கவே ஜமாஅத் பெரிதும் விரும்புகின்றது.
வழிமுறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்காக அமைதியான, ஆக்கப்பூர்வமான, சட்டப்பூர்வமான வழிகளையே மேற்கொள்கின்றது. இஸ்லாமிய போதனைகளைக் கொண்டு மனிதர்களின் சிந்தனை, செயல், உணர்வு ஆகிய மூன்றையும் நெறிப்படுத்தி இஸ்லாமிய சித்தாந்தத்துக்கு இயைந்து போகின்ற வகையில் மக்கள் கருத்தை வார்த்தெடுத்து சமூகத்திலும் நாட்டிலும் தான் விரும்புகின்ற மாற்றங்களைக் கொண்டு வரவே ஜமாஅத் விரும்புகின்றது
ஜமாஅத் ஒழுக்க மாண்புகளுக்கும் தார்மிக வரம்புகளுக்கும் உட்பட்டே தன்னுடைய எல்லா பணிகளையும் சேவைகளையும் மேற்கொள்கின்றது. சமூக பதற்றத்தை, தேவையற்ற கொந்தளிப்பை, வர்க்கப் போராட்டத்தை, குழப்பத்தை கலவரத்தை தோற்றுவிக்கக்கூடிய செயல்உத்திகளை ஜமாஅத் முற்றாக தவிர்த்தே வந்திருக்கின்றது.
முக்கிய சாதனைகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, இந்தி, உர்தூ, ஆங்கிலம், பஞ்சாபி, ஒரியா, வங்காளம் உட்பட நம்முடைய நாட்டின் தேசிய மொழிகள் அனைத்திலும் திருக்குர்ஆனை
மொழிபெயர்க்கின்ற மகத்தான சாதனையை ஜமாஅத் செய்து முடித்திருக்கின்றது.
இஸ்லாத்தின் போதனைகளை எடுத்துரைக்கின்ற, இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்களைப் பற்றியும் நிலவுகின்ற தவறான கருத்துக்களைக் களைகின்ற, உள்ளங்களையும் இதயங்களையும் புரட்டிப் போடுகின்ற,
அழகும் அர்த்தமும் மிளிர்கின்ற நூல்களை ஜமாஅத் வெளியிட்டிருக்கின்றது.
இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு பாதை அமைத்து தேசத்தையும் சமுதாயத்தையும் மறுகட்டமைப்புச் செய்கின்ற அறப் பணியில்
அவர்களை ஒன்றுதிரட்டி வருகின்றது.
குர்ஆனின் அடிப்படையிலும் நபிவழியின் ஒளியிலும் மனிதர்களின்
வாழ்விலும் நடப்பிலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
நாம் மேற்கொண்டுள்ள பணிகள் அனைத்துக்கும் உண்மையான உந்துசக்தியாக, ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற மிகப் பெரும் நோக்கமாக இருந்து வருவது மறுமையில் வெற்றி கிடைக்க வேண்டுமே என்கிற தவிப்பும், இறைவனின் உவப்பு வாய்க்க வேண்டுமே என்கிற ஆசையும்தாம்.
![]()

தீனை நிலைநாட்டுங்கள்; அதில் பிரிந்துவிடாதீர்கள்! (அத்தியாயம் 42 அஷ்ஷூரா 13)
கலங்கரை விளக்கம்
இஸ்லாமிய போதனைகளையும் மாண்புகளையும் பரப்புகின்ற, இஸ்லாமிய எழுச்சியைத் தோற்றுவிக்கின்ற ஆற்றல்வாய்ந்த நூல்களை நம்முடைய நாட்டின் பதினேழு தேசிய மொழிகளில் வெளியிடுவதில் முன்னோடியாக, புதிய போக்குகளை அறிமுகப்படுத்துகின்ற ஆற்றல்மிகு சக்தியாக, பாதை காட்டுகின்ற கலங்கரை விளக்கமாக ஜமாஅத் மிளிர்கின்றது.
நம்முடைய நாட்டில் மிகப் பெரும் எண்ணிக்கையில் பேசப்படுகின்ற முக்கியமான மொழிகள் அனைத்திலும் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த தனிச் சிறப்பும் ஜமாஅத்துக்கு உண்டு.
குர்ஆனை மொழிபெயர்த்ததோடு நபிமொழிகள், நபிகளாரின் வரலாறு, இஸ்லாமிய வரலாறு, நேர மேலாண்மை, மனித உரிமைகள், சட்டம், அரசியல், சுயசரிதை, குழந்தை இலக்கியம், சிறார் இலக்கியம், மகளிர் மேம்பாடு, ஆன்மிகம் என பலதரப்பட்ட தலைப்புகளிலும் ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டு முத்திரை பதித்திருக்கின்றது.
ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் சமூகம்
ஜமாஅத்தின் பணிகளை ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் விழுமம் சார்ந்த சமூகத்தை கட்டமைக்கின்ற போராட்டத்தில் முழுமூச்சாக இறங்கி இருக்கின்ற ஜமாஅத் என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். நீதி, சமத்துவம், சுதந்திரம், அமைதி, இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய வாழ்வை கட்டமைப்பதுதான் ஜமாஅத்தின் முதன்மைப் பணியாக இருந்து வந்துள்ளது.
சமூக நீதியை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நிலைநிறுத்துவதை உயிர்மூச்சாக கொண்டு அது இயங்கி வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பதில் உண்மையான வெற்றி இருக்கின்றது என்பதை உரத்துச் சொல்லி வருகின்றது.


மகளிர் மேம்பாடு
இஸ்லாமிய எழுச்சிக்கான இந்த மகத்தான அறப்பணிகளில் பெண்களின் மும்முரமான, சுறுசுறுப்பான பங்கேற்பையும் பங்களிப்பையும் உறுதி செய்வதில் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளது. புத்துலகு சமைப்பதில் பெண்களின் பங்கை இஸ்லாம் அதிகமாக அறிவுறுத்துவதால் இஸ்லாமிய வரலாறு முழுவதிலும் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் அனைத்தையும் தழுவியதாய், பிரமாதமானதாய், மனஎழுச்சியை ஏற்படுத்தக்கூடியதாய் இருந்து வந்துள்ளது. இன்றும் நம்முடைய நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக ஆர்வலர்களாய், மக்கள் சேவகர்களாய், திசைகாட்டும் கலங்கரை விளக்கங்களாய் மௌனமாக, அழுத்தமாக, சிறப்பாக ஓயாமல் ஒழியாமல் உழைத்து வருகின்றார்கள். சமூக மேம்பாட்டுக்காகவும் தேச நலன்களுக்காகவும் சத்தம் போடாமல் மகத்தான அளவில் சேவையாற்றி வருகின்றார்கள்.
ஜமாஅத்தின் கொள்கைகளையும் செயல்முறைகளையும் தீர்மானிக்கின்ற ஆற்றல் வாய்ந்த ஆட்சிமன்றக் குழுவாக இருக்கின்ற அகில இந்திய பிரதிநிதிகள் சபையில் முப்பத்து மூன்று சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள ஒரே முஸ்லிம் அமைப்பு என்கிற சிறப்பும் ஜமாஅத்துக்கு உண்டு. ஜமாஅத்தின் இந்த ஏற்பாடு பெண்கள் மத்தியில் ஆற்றல் வாய்ந்த ஆளுமைகளை உருவாக்குவதற்கு உதவி இருக்கின்றது. இப்போது ஜமாஅத்தின் முதன்மை ஆட்சிமன்றக் குழுவாக இருக்கின்ற மத்திய ஆலோசனைக் குழுவில் இரண்டு சகோதரிகள் தேர்வாகி இருப்பதே இதற்குச் சான்று.